ஃ – தமிழ் சினிமாவில் புது முயற்சி

ss.jpg

அஜய், ஸ்ரீஜி, அனுஹாசன், ரியாஸ்கான், ரக்‌ஷை, ராம்கான், ஜெயஸ்ரீ, பிஜு, லட்சுமி, ஹாரிஸ் நடிப்பில் சிட்டிபாபு ஒளிப்பதிவில், ஸ்ரீராம் இசையில் மாமணி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆன் லைன் நெட் ஒர்க்.

தமிழில் தலைப்பு வைக்கவே தயங்கியவர்களின் மத்தியில் ‘ஃ’ என்று யாரும் பயன்படுத்தாத ஆயுத எழுத்தை பெயராக வைத்த துணிச்சலை முதலில் பாராட்ட வேண்டும். பெயரைப் போலவே படமும் துணிவான முயற்சிதான்.

தீவிரவாதியாக நடிக்கும் ரக்‌ஷை, தன் தங்கை ஸ்ரீஜியை காதலிக்கும் நாயகன் அஜயை வெறுக்கிறார். இதன் காரணமாக மனம் வெறுத்த காதல் ஜோடிகள், சாவில் இருவரும் நாம் இணைவோம் என்று தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.

விஷம் அருந்த முடிவெடுத்த பின், கடைசி நொடியில் வாழ ஆசை வருகிறது. முடிவை மாற்றிக் கொள்கிறார்கள். தனிமையில் இருவரையும் பார்த்த ரக்‌ஷையின் ஆட்கள் ஸ்ரீஜியை கண் காணாத இடத்தில் சிறை வைக்கிறார்கள்.

இதோடு நின்றுவிடாமல், “நீ சாதாரணமாக பொசுக்கென்று சாகக் கூடாது. அணு அணுவாக சாக வேண்டும்” என கூறி நாயகன் அஜய் ஷூவில், வெடிகுண்டை பொருத்தி விடுகிறார் ரக்‌ஷை.

“ஓடிக்கொண்டே இரு, நின்றால் சிதறி விடுவாய்” என ரக்‌ஷை எச்சரிக்க, ஓடுகிறார்… ஓடுகிறார்… அஜய் ஓடிக் கொண்டே இருக்கிறார். முடிவு என்ன என்பதே மீதிக்கதை.

படத்தின் தொடக்கத்தில் தீவிரவாதியின் நடவடிக்கைகள், இரு காதலர்களின் அன்யோன்யம் இவற்றைக் காட்டுகிறார்கள். அஜய்யின் காலில் எப்போது வெடிகுண்டு பொருத்தப்படுகிறதோ அந்த வினாடியில் இருந்து நம்மை பரபரப்பும் படபடப்பும் பற்றிக் கொள்கிறது. படமும் ‘விர்’ ஆகிறது

ss23.jpg

இப்படிப்பட்ட சூழலில் சம்பந்தப்பட்டவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் குண்டு வெடிப்பின் மூலம் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று காவல்துறையும் திட்டமிடுகிறது.

இதுமாதிரி இக்கட்டான சூழ்நிலையில் மக்களைக் காப்பாற்ற காவல்துறை மேற்கொள்ளும் அறிவுபூர்வமான, பொறுப்பான, விரைவான நடவடிக்கைகள் திட்டங்கள் பற்றி நேர்த்தியான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் மாமணி.

இந்தப் பரபரப்பை ‘லைவ்’ ரிலே செய்து டிவி சேனல்கள் பெயரெடுக்கத் துடிக்கும் இன்றைய மீடியாவின் வேகத்தையும் காட்டியுள்ளார்.

நாயகன் அஜய். நாயகி ஸ்ரீஜி. வில்லன் ரக்‌ஷை. பாம் ஸ்குவாடு ஆபீசர் அனுஹாசன். ரியாஸ்கான் அசிஸ்டெண்ட் கமிஷனர். ராம்கான் இன்ஸ்பெக்டர். கதையின் போக்கும் ஓட்டமும் விறுவிறுப்பாக இருப்பதால் யார் முகமும் முன்னுரிமை பெறவில்லை. கதையோடு சேர்ந்து எல்லாருமே பயணிக்கிறார்கள்.

பெரும்பாலும் புதுமுகங்களைத் தேர்வு செய்திருக்கும் முயற்சியே படத்துக்கு பெரிய அனுகூலமாக இருக்கிறது. சினிமா என்பதை மறக்கடிக்கிறது. ஒளிப்பதிவும் இசையும் நல்ல தேர்வு+நேர்த்தி.

ஆங்கிலப் படத்துக்கு இணையாக புதிய முயற்சியில் படம் பரபரக்கிறது. படத்தில் உள்ள சிறு சிறு குறைகளை பெரிதுபடுத்தி இதுமாதிரி துணிவான தெளிவான முயற்சி செய்யும் இளைஞர்களை சோர்வடையச் செய்துவிடக் கூடாது. இயக்குனர் மாமணியை தட்டிக் கொடுத்துப் பாராட்டலாம், தாராளமாக. வாழ்த்துகள்!

Leave a Reply