| வெற்றிபெற்ற பல தமிழ் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் பிரசன்னக்குமார் மரணமடைந்தார். யார்விட்ட சாபமோ தமிழ்த்திரையுலகில் சில மாதங்களாக திரைக்கலைஞர்கள் பலரது கடைசி அத்தியாயம் கிழிக்கப்பட்டு வருகிறது. |
| நடிகர் பாண்டியன், எழுத்தாளர்கள் சுஜாதா, ஸ்டெல்லாபுரூஸ், நடிகர்கள் ரகுவரன், சோபன் பாபுவை தொடர்ந்து பிரபல வசனகர்த்தாவான பிரசன்னகுமாரும் மரண மடைந்தார்.
பாலைவனச்சோலை படம் மூலம் கலையுலகில் காலடி எடுத்துவைத்தவர் பிரசன்னக்குமார். இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர் விவேக்கிற்கு நீண்ட காலமாக காமெடி டிராக் எழுதிவந்தார். நேற்று திரைக்கு வந்துள்ள ‘சண்டை’, ‘சிங்கக்குட்டி’ ஆகிய படங்களிலும் காமெடி எழுதியுள்ளார். கடந்த சில வருடங்களாக சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டுவந்த பிரசன்னாவுக்கு திடீரென கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்றிரவு 10.30 மணிக்கு பிரசன்னாவின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். 49 வயதாகும் பிரசன்னாவுக்கு பானுமதி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள தேரடி தெருவில் பிரச்சனைவின் வீடு உள்ளது. இவர் மறைந்த தகவல் அறிந்ததும் விவேக் விரைந்து சென்று பிரசன்னாவுக்கு அஞ்சலி செலுத்தினார். ‘ரன்’, ‘தை பொறந்தாச்சு’, ‘மனதை திருடிவிட்டாய்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பிரசன்னா, சிறந்த வசனகர்த்தாவாக தமிழக அரசின் விருதும் பெற்றவர். |
