

தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைக்கும் எந்தவொரு இளைஞரும், தனது படைப்பில் ரகுவரனுக்கென்று ஒரு கதாப்பாத்திரத்தை வைத்திருப்பர்!’
இதை, எள்ளளவும் கர்வமின்றி பேட்டி ஒன்றில் சொன்னவரும் ரகுவரனே!
தமிழ்த் திரையுலகில் தனித்தன்மை மிகுந்த நடிப்புத் திறனால் சுட்டிகள் முதல் பாட்டிகள் வரை வசீகரித்திருந்த இவர், உடல்நலக் குறைவின் காரணமாக இன்று (மார்ச் 19) மரணமடைந்தார்.
எம்.ஜி.ஆர் காலத்தில், அவருக்கு வில்லன்களாக வரும் நம்பியார், அசோகன், மனோகர் போன்றோரை உண்மையாகவே கெட்டவர்களாகாவே கருதி, அவர்களை வாயார வையும் ரசிகர்களைக் கொண்ட தமிழகம், வில்லத்தனங்களையும் ரசிக்கத் தொடங்கியது ரகுவரன் உள்ளிட்டோரின் வருகைக்குப் பிறகுதான் என்றுச் சொன்னால் அது மிகையாகாது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ரகுவரன், கோவையில் 1948-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார்.
கே.ஹரிஹரன் இயக்கத்தில் 1982-ல் வெளிவந்து சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற ‘ஏழாவது மனிதன்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என்று வெவ்வேறு கதாப்பாத்திரத்திலும் சுமார் 25 ஆண்டுகாலம் தமிழ்த் திரையுலகில் தனி முத்திரைப் பதித்தார்.
போதைப் பழக்கத்துக்கு அடிமையானது, இல்லற வாழ்க்கையில் பிரிவு என தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சோகங்களைச் சந்தித்த இவர், தனது கலையுலக வாழ்க்கையை முழுமையாகவே பூர்த்திசெய்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரகுவரன், சமீபத்தில் சிறிது காலம்
நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அவரை தனது ‘சிவப்பதிகாரம்; படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் கரு. பழனியப்பன்.
அதன்பின், மீண்டும் வலம்வரத் தொடங்கியவர், ‘தொடக்கம்’ படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வேடத்தில் நடித்தார். அந்த வேடத்தில் நடித்தது தனக்கு நிறைவாக இருந்தது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரகுவரன் கடைசியாக நடித்து வெளிவந்த படங்கள் ‘பீமா’, ‘சில நேரங்களில்’; வெளிவராத படங்கள் ‘இந்திர விழா’, ‘யாரடி நீ மோகினி’. அத்துடன், அஜித்தின் புதிய படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார்.
மிஸ்டர் பாரத் , உதயம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, புரியாத புதிர், காதலன், பாட்ஷா, முதல்வன் போன்ற படங்கள் இவரது வில்லத்தனத்தில் வசீகரிக்கப்பட்டவற்றில் குறிப்பிடத்தககவை.
ஏழாவது மனிதன், ஓடை நதியாகிறது, சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி, முகவரி, ரன், சிவப்பதிகாரம் போன்ற ஏராளமான படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் ஆட்கொண்டவர்.
நடிகர் ரகுவரன்… இவரது யதார்த்தம் பிறழாத நடிப்புத் திறன், ரசிகர்களுக்கு மட்டுமின்றி, நடிப்புத் துறையிலுள்ள பலரையும் வியக்கவைத்துள்ளது மறுக்க முடியாத உண்மை